தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! போற்றத்தக்கது எனக் குறிப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்க முடியாத ஓர் அவலநிலை ஏற்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணீரும், கம்பலையுமாக அந்த மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கூறயதை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவரும் கண்ணீர் விடாத குறைதான்.
இடங்கள் கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டோம் - இந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று அவ்வறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், அந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கான கட்டணத் தொகையை தி.மு.க. ஏற்கும் என்று அறிவித்திருப்பது - போற்றி வரவேற்கத்தக்கது; சமூகநீதியில் தி.மு.க. வுக்கு இருக்கும் அபரிமிதமான அக்கறையையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தக் கூடிய ஆக்கப்பூர்வமான - காலத்தால் அறிவிக்கப்பட்டுள்ள - காலாகாலமும் நின்று பெருமையுடன் பேசப்படக் கூடிய சீரிய முடிவாகும்.
உள்ளந்திறந்து பாராட்டுகிறோம்; பாராட்டுகிறோம்! வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.