நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் பாலன் இல்லம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்போம். குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் தரும் சட்டமாகவே உள்ளது.
இந்த சட்டம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறது. ஆனால் இது விவசாயிகளுக்கு சாதகமாக இருக்காது. வியாபாரிகளுக்கே சாதகமாக இருக்கும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில், பெரம்பலூரில் வியாபாரிகள் வெங்காயத்தை டன் கணக்கில் இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பார்க்கின்றபோது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச்சட்டம் மூன்று மாதத்திற்குள் தோல்வி அடைந்ததுவிட்டது என்பது நிரூபணமாகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைப் பார்த்து மவுனம் காக்காது தமிழக அரசு தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தி.மு.கவின் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவரை காவல்துறையினர் கொரோனாவை காரணங்காட்டி கைது செய்துள்ளனர். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசு சூழலில் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பணத்தை செலவு செய்து, அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் அரசியல் பேசுகின்றனர். ஆனால் அதே கொரோனாவை காரணங்காட்டி எதிர்க்கட்சிகளை முடக்கி வருவது கண்டிக்கத்தக்கது.
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கமாட்டோம் என கூறிவிட்டு, அனுமதி அளிப்பது அ.தி.மு.கவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தில் இரண்டு அணி தான்; மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை, அமைந்தாலும் அந்த அணி வெற்றி பெறாது. தமிழகத்தில் பா.ஜ.க தலைகீழாக நின்றாலும் காலூன்ற முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு கோயில்களிலிருந்து காணாமல் போன சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பின்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிலைகள் மீட்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், சிலையை கடத்தியவர்கள் யார், இதில் யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதற்கெல்லாம் முதல்வர் கண்டிப்பாக விளக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.