சென்னை துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10-ம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து திருடப்பட்டது, இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
மேலும் 15 ஆம் தேதி இரவு பெருங்குடி கங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடப்பட்டது. தொடர்ச்சியாக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த துரைப்பாக்கம் போலீசார் 3 உண்டியல் உடைப்பு சம்பவத்திலும் தொடர்புடையவர் ஒரே நம்பர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது உண்டியல் உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்தான் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தது தெரியவந்தது.
இதனையடுத்து துரைப்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில் ஏற்கனவே துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று இருப்பதும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்தது.
போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதால் பணத்தேவைக்காக கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடி வருவதும் திருடிய பணம் செலவு செய்த பின் அடுத்த கோயில் உண்டியலை உடைத்து திருடுவதும் வாடிக்கையாக கொண்டது தெரியவந்தது. மேலும் உண்டியலில் அதிகமாக பணம் கிடைக்காததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து விடலாம் என எண்ணி, அதற்காக சிறிய அளவிலான கடப்பாரை கொண்டு வந்து ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்தும் பணத்தை எடுக்க முடியாததால் திரும்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்து உண்டியலில் இருந்து திருடிய பணம் ரூ.2000-ஐ கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.