நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தச்சுத் தொழிலாளியான இவர் கஸ்பா என்ற பகுதியை சேர்ந்த மரியசெல்வம் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் தொகைக்கான சீட்டு போட்டுள்ளார்.
பாலசுப்பிரமணியன் சீட்டு பணத்தை தவறாமல் கட்டி வந்தார். இந்த நிலையில், சீட்டு முதிர்வு காலம் அடையவே மரிய செல்வத்திடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால், மரிய செல்வமோ பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அலைக் கழித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மரிய செல்வத்தின் வீட்டு முன்பு வந்து பாலசுப்பிரமணியன் தனது பணத்தை தர வேண்டும்; இல்லை என்றால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் இருந்த மரியசெல்வம் முன்பே, பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தீ மளமளவென பாலசுப்பிரமணியத்தின் உடல் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியம் ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், மரிய செல்வத்தை விக்கிரமசிங்கபுரம் போலிஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்த மாரிச்செல்வம் எந்தவித பதட்டமும் இன்றி, இங்கும் அங்கும் சென்றும் தனது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தத்திலேயே முனைப்பாக உள்ளார். இந்த காட்சி முழுவதும் மாறிய செல்வத்தின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் இருந்து போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.