கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அரசின் இந்த அறிவிப்பையடுத்து, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நவ.16-ல் பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது” என தெரிவித்திருந்தார்.
மேலும், பள்ளிகளை இப்போது திறக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து 12,700 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தபோது பெரும்பான்மையான பெற்றோர் பள்ளி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் நீதிமன்றமும் கூட அரசு பள்ளிகள் திறக்கும் முடிவினை கைவிட வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது. பள்ளிகள் திறப்பு சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்!” - என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி அ.தி.மு.க. அரசின் வழக்கமாக ஆகிவிட்டது. கொரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள் தான் அச்சம் தருவதாக உள்ளது.
குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு பள்ளித்திறப்பு உதாரணம் ஒன்றே போதும்! குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி அ.தி.மு.க. அரசின் வழக்கமாக ஆகிவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.