இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் தலையாய கடைமை என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்து பேசிய அவர், “இந்திய வரலாற்றில் 2016 நவம்பர் 8ஆம் தேதி ஒரு கருப்பு நாள். மோடி திடீரென்று 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில், வீழ்ச்சி அடைந்து பாதிப்பு ஏற்படுத்திய தினம். ஆகவே இதனை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது இதன் மதிப்பு 2.25 லட்சம் கோடி. கருப்புப் பணத்தை ஒழித்து, தீவிரவாதத்தை ஒழித்து இந்திய பொருளாதாரத்தில் பணமில்லா பரிமாற்றத்தை கொண்டு வந்ததாக மோடி அரசு பெருமைப்பட்டுக் கொண்டது. இது சட்டப்பூர்வ கொள்ளை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்திருந்தார். கருப்பு பணமும் ஒழியவில்லை தீவிரவாதமும் ஒழியவில்லை.
உலக வங்கி மற்றும் உலக நாடுகள் இந்தியாவை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலையாய கடமை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நேரு காலத்தில் துவங்கி மன்மோகன் சிங் வரை இங்கு சிறப்பாக பொருளாதார வளர்ச்சியை ,உணவு உற்பத்தியில் தன்னிறைவு கொண்டு வந்ததது. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 9.2 சதவீத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடைந்தது.
ஆனால், தற்போது தவறான மோசமான சூழலை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த நோட்டுகள் ரூபாய் 15. 44 லட்சம் கோடி. திரும்ப வந்த மொத்த தொகை 15.31 லட்சம் கோடி. புது ரூபாய் நோட்டு அச்சடித்து அதற்கான செலவு ரூபாய் 12,877 கோடி இந்த அறிவிப்பால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன என்று பிரதமர் மோடி இதுவரை கூறியதில்லை என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாய விற்பனை நம் கையில் இருந்தது. பெரு முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே இந்த விவசாய சட்டம் அமல்படுத்தி உள்ளது பாஜக அரசு. ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் திருவண்ணாமலை, தேனி போன்ற இடங்களில் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் 24ம் தேதி கோயம்புத்தூரில் விவசாய சங்க கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்பொழுது ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது, வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லவேண்டும் என்பதை உணர்த்தவே இப்பேரணியின் முயற்சி.
அதிமுகவின் ஐ.டிவிங் வெளியிட்ட ஒரு செய்தி படித்தேன். கொள்கை இல்லாத கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி என்று கூறியுள்ளது . வாய் பொத்தி கைக்கட்டி இருக்கக்கூடிய கூட்டணி இல்லை. கருத்துக்களை தெளிவாக தீர்க்கமாக சொல்லும் கூட்டணி.
மாநில அரசு வேல் யாத்திரைக்கு நடத்தக்கூடாது என்று கூறியும், பாஜக நடத்துகிறது எனும் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அதிகாரிகள் சட்டத்திட்டங்களின் நிலை வேதனை பாஜக முருகரை விட்டுவிட்டார்கள் கையிலிருக்கும் வேலை பற்றிக்கொண்டு தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளை திசை திருப்பவே இந்த வேல் யாத்திரை.