தமிழ்நாடு

“பா.ஜ.கவினர் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் இனி பங்கேற்பதில்லை” - ஊடகக் கண்காணிப்புக் குழு தீர்மானம்!

பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் தி.மு.க தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு தீர்மானம்.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று (06.11.2020) இணைய வழியில், தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அருள்மொழி (திக), கோபண்ணா (காங்கிரஸ்), மகேந்திரன் (சிபிஐ), கனகராஜ் (சிபிஎம்), மல்லை சத்யா (மதிமுக), ரவிக்குமார் (விசிக), அப்துல் ரஹ்மான் (இயூமுலீ), அப்துல் சமது (மமக), சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* ஊடக விவாதங்களில் பா.ஜ.க சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்துக்கு அழைக்கவேண்டியது ஊடகங்களில் கடமை என்றாலும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றைத் தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே ஆகும். மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களுடைய அச்சுறுத்தலின் காரணமாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது. எனினும் இதை இப்படியே அனுமதிப்பது தமிழகத்தின் அரசியல் சூழலைப் பாழ்படுத்தி விடும் என்று அஞ்சுகிறோம். எனவே, பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்படுகிறது.

* ஊடக விவாதங்களில் பங்கேற்போர் தாம் தெரிவிக்கும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பரம் அதிகமாகக் கிடைக்கிறதே தவிர நட்டம் எதுவும் இல்லை. ஆனால் இப்படி பகிரும் போது அதை சட்டவிரோதம் என்றும் அது தொலைக்காட்சி சேனல்களின் அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக இருக்கிறது என்றும் சில ஊடக நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்புகின்றன. இது ஊடக விவாதங்களில் பங்கேற்றுக் கருத்து சொல்வோரின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. எவர் ஒருவரும் தான் சொல்லும் கருத்து அதிகமானவர்களைச் சென்றடைய வேண்டும் என்றே விரும்புவர். அதிலும் சமூக ஊடகங்கள் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இணையாக மக்களிடையே செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில் இப்படி கருத்துக்களைப் பகிர்வதைத் தடைசெய்வது ஏற்புடையது அல்ல. எனவே, ஊடக நிறுவனங்கள் இது பற்றிய தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories