தமிழ்நாடு

“கீழ்த்தரமான அரசியல் செய்யாமல் 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் பெறுங்கள்” : எடப்பாடியை சாடும் பொன்முடி MLA!

கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், ஆளுநரை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறுங்கள் என தமிழக முதல்வருக்கு பொன்முடி எம்.எல்.ஏ கோரிகை வைத்துள்ளார்.

“கீழ்த்தரமான அரசியல் செய்யாமல் 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் பெறுங்கள்” : எடப்பாடியை சாடும் பொன்முடி MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே இரண்டு ஆண்டுகளாக ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், தயவு செய்து கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், ஆளுநரை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறட்டும்!" என தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமதி. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2000-ஆம் ஆண்டே உத்தரவிட்டது தி.மு.க. அரசுதான்! உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த ஒரே ஆண்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது. 2011-இல் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டது இதே அ.தி.மு.க. அரசுதான்!

இன்றைக்கு 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்ற நேரத்தில் 7 பேரின் விடுதலையில் அனைத்து குழப்பங்களையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் ஆறு ஆண்டுகளாக இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்துகொண்டிருப்பதும் அ.தி.மு.க. அரசுதான்!

முதலில் 2014 தேர்தலுக்காக - ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்து இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்தது அ.தி.மு.க. அரசு. இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி - இரண்டு ஆண்டுகள் அமைதி காத்து விட்டு - இப்போது எங்கள் கழகத் தலைவர் கோரிக்கை வைத்த உடன் பதற்றப்படுகிறார் திரு. பழனிசாமி .

தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதலமைச்சருக்கு, தி.மு.க. குறித்து குற்றம்சாட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

தயவு செய்து இதிலும் கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், நேராக ஆளுநர் மாளிகைக்குச் செல்லுங்கள். ஆளுநர் அவர்களை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறுங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories