மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் மையம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் மையம் அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய இச்சங்கத்தின் பொறுப்பாளர் புகழேந்தி, “நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான அமைச்சர் சரோஜாவிடம் மனு அளிக்க காவல்துறையினரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் ஊரடங்கை காரணம்காட்டி அமைச்சரை சந்திக்க அனுமதி மறுத்துவிட்டனர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை சுயமாக தொழிலும், மின்சார ரயிலில் வியாபாரமும் செய்து வந்தோம். மார்ச் 25 முதல் ஊரடங்கு காரணமாக தற்போது தன்மானமிழந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்கு வந்திருக்கிறோம்.
புதிய தொழில் தொடங்க அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும். மகளிர் சுய உதவிக் குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 100 சதவீதம் அரசு கொள்முதல் செய்வது போல மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. கடன் தர ஆளில்லை. வெறும் 1,000 ரூபாய் நிவாரணத்தால் என்ன பலன்?” என வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மற்றொரு நிர்வாகியான நாகராஜன், “போக்குவரத்து, ரயில்வே துறையில் வேலைவாய்ப்பையும், கணிப்பொறி பயிற்சியை எங்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
13 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டதாக அரசு கூறினாலும் பாதி பேருக்கு மட்டுமே நிவாரணத் தொகை கிடைத்தது” எனத் தெரிவித்தார்.