தமிழ்நாடு

“விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு - விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்” : வைகோ எச்சரிக்கை!

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பா.ஜ.க மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

“விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு - விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்” : வைகோ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தருமபுரி மாவட்டத்தில் விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்க நடுவண் அரசே கையகப்படுத்தி, பாரத்பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தைச் (IDPL) செயல்படுத்தி வருகின்றது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்; பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். எனவே, இது குறித்து விவசாயிகள் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டனர்.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, தொழில்துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். ‘இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது’ என தொழில்துறை அமைச்சர், 2020 பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.

“விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு - விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்” : வைகோ எச்சரிக்கை!

அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் தில்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். அனைத்து இந்திய விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு ஆகிய இரு தாலூக்காக்களில், இந்தத் திட்டத்திற்கான நிலங்களை, நடுவண் அரசே கையகப்படுத்தி, பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பாஜக மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது. விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும்; விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories