சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில், இரண்டு தனியார் ஏ.டி.எம் இயந்திரங்களும் உடைக்கப்பட்டு இருப்பதாக செம்மஞ்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து வந்த போலிஸார் ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குறிய ஒரு நபர் வருவதும் அடுத்தடுத்த இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை உடைப்பதும் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலிஸார் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது், அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் வடமாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போலிஸார் சோதனை செய்தனர். அப்போது பெரும்பாக்கம் பகுதியில் கட்டிட வேலை நடைபெரும் இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான மேற்கு வங்காளத்தை சேர்ந்த புருஷோத்தமன் பாண்டே (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தன்னுடைய செலவிற்கு ஐ.சி.ஐ.சி ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்றும் ஆகையால் கல்லால் உடைத்து பணம் எடுக்க முயற்சித்தும், பணம் வராமல் போனதால் பின்னர் அருகில் இருந்த அக்ஸிஸ் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சித்தும் பணம் வராமல் போனதால் அதையும் கல்லால் உடைத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலிஸார் புருஷோத்தமன் பாண்டேவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.