தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இதனையடுத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., ”தமிழகத்தில் ஆளக்கூடிய அ.தி.மு.க அரசிற்கு தற்போது உங்களது எந்த கோரிக்கையும் அவர்களது காதில் விழாது. அப்படியே தப்பி தவறி காதில் விழுந்தாலும், செய்து கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இன்றும் 6 மாதங்கள ஆட்சி. அதன் பின்னர் வெற்றி பெற முடியாது.
அதனால், தனக்கு தேவையானதை சம்பாதித்து விட்டு, வீட்டுக்கு போய்விடலாம் என்ற முடிவோடு வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது, தங்களுக்கு எங்கு லாபம் வரும் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர மக்களின் நிறைவேற்றி தருவதற்கு எந்தவிதமான முயற்சியும் அவர்கள் செய்வதில்லை.
எங்கு சென்றாலும் 100 நாள் வேலை முறையாக வழங்குவதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, ரேஷனில் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை, முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை, சாலை வசதி செய்து தருவதில்லை. இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை.
விவசாயிகளை கார்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கக்கூடிய சட்டங்களை மோடி அரசு உருவாக்கி உள்ளது. ஆனால், தன்னை விவசாயி என கூறும் முதல்வர் வரவேற்றுள்ளார். இந்த சட்டங்களை எதிர்த்து போராடுவது, குரல் கொடுப்பது தி.மு.க தான். தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்.
நமது உரிமைகளை காப்பாற்ற நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் தமிழகத்துக்கு வந்த சேர, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய ஆட்சி உருவாக வேண்டும். அது தி.மு.கவின் ஆட்சியாக, தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.