பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, இந்தியாவில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில், 5ம் இயல் பிரிவில் - திறன் அறிவோம் பகுதியில், இடம் பெற்றுள்ள வினா ஒன்றில், “இந்தி கற்க விரும்பும் காரணம் என்ன” என குறிப்பிட்டு அதற்கு காரணமாக சில விடைகளை குறிப்பிட்டு, அதில் “இந்தி நமது நாட்டின் தேசிய மொழி, பாராளுமன்ற மொழி” போன்ற சில இந்தி ஆதரவு கேள்வி பட்டியலிட்டப்படி, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, மோடி அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் இந்தி மொழித் திணிப்பை மேற்கொள்கிறதா? என கடும் கண்டனம் எழுந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய “தமிழ் பாட புத்தக்கத்தில், இந்தி மொழிக்கு ஆதரவான கேள்வி” என்ற புகைப்படம் தவறான என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அளித்த விளக்கத்தில், “தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் “தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3-வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக” என்று மட்டுமே கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
3-வது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம்; பாட புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. தனியார் பதிப்பகங்கள் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் (Notes), இந்தி மொழி குறித்து விடைகளை எழுதியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “பாட புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பகங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் வினா - விடை உரைகள் பற்றி ஆய்வு செய்து, பாடபுத்தக்கத்திற்கு ஏற்றது போல சரியான மொழி பெயர்ப்புடன் கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளதா என்பதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாக கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், தேர்வுக்காக மாணவர்கள் பல புத்தகங்களை படிக்கும் வேளையில், இதுபோல உரைகளினால் மாணவர்கள் குழப்பமடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.