தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டது.
அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிய கலந்தாய்வின் மூலம் 69,752 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. 93,402 இடங்கள் காலியாக உள்ளது. அதாவது, பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 56.4 சதவீதம் இடங்கள் காலியாகவே உள்ளன.
12 அரசு பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 30 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகான பத்தாண்டுகளில் போதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படாததால் பொறியியல் படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.