வெங்காயத்தின் விலை கடந்த வாரம் மூலம் உயர்ந்து வந்த நிலையில், தற்போது கிலோ 180 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக வெங்காய வரத்து தமிழகத்தில் மிகவும் குறைந்து உள்ளது. கன மழையின் காரணமாக வெங்காயம் விலை தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடக, மாநிலத்தில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300 லிருந்து 350 லாரிகள் மூலம் தினசரி காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெங்காயத்தின் விலை கடந்த இரண்டு வாரமாக உச்சத்தில் இருந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுபோன்று வெங்காயத்தின் விலை ஏறி வருவதால் பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கும் சக்தியை இழந்து வருகின்றனர். தினசரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டு வருவதால் தாங்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, வெங்காய விலை அதிகரிப்பின் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரியாணி உள்ளிட்ட உணவுப்பண்டங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரியாணி தயாரிப்பில் வெங்காயம் அவசியம் என்பதால், பிரியாணி கடைக்காரர்கள் தவித்துப் போயுள்ளனர். இதனால் பிரியாணியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளார்கள் கடைக்காரர்கள். உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்கள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் குறைந்த விலையில் தங்குதடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
காய்கறிகள் சில்லறை விலை நிலவரம்:
தக்காளி ரூ.40
பெரிய வெங்காயம் ரூ. 100
உருளைக்கிழங்கு ரூ. 60
சாம்பார் வெங்காயம் ரூ.180
பீன்ஸ் ரூ. 80
பீட்ரூட் ரூ. 50
செவ் செவ் ரூ. 30
முள்ளங்கி ரூ. 35
கோஸ் ரூ. 30
வெண்டைக்காய் ரூ.40
கத்திரிக்காய் ரூ. 40
முருங்கைக்காய் ரூ.60
காளிபிளவர் ரூ.30
சேனைக்கிழங்கு ரூ.30
பச்சைமிளகாய் ரூ.60
இஞ்சி ரூ. 100
அவரைக்காய் ரூ. 80