உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் விமர்சையாக இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒரு நாள் நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டு, தஞ்சை பெரிய கோவிலில் தேவாரப் பாடல்களை 10 க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பாட தமிழ் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் கோவிலின் வளாகத்தின் உள்ளேயே திருமுறைகளுடன் ஊர்வலமாக வலம்வந்த பின்பு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராவ் தலைமையில் சதய விழா குழுவினர், பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனையடுத்து பெரிய கோயில் பெருவுடையார், பெரியநாயகிக்கு சந்தனம், மஞ்சள் , மூலிகைகள் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்பட்டனர். இராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவிக்க வருவார்கள் என்பதால் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.