"அ.தி.மு.க. நடத்தும் 'நீட்' நாடகத்தின் சாயம் வெளுத்துவிட்டதால், தி.மு.க. நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள்; பழனிசாமி அரசு, தமிழக மாணவர்களுக்குச் செய்துவரும் துரோகப்பட்டியலுக்குப் பதில் சொல்லத் தயாரா?" என திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் அரசியல் போராட்டம் நடத்துகிறது தி.மு.க." என்று தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க எங்கள் கழகத் தலைவர் தளபதி அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்திய மாபெரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் “சூப்பர் ஸ்போக்ஸ்மேன்” அமைச்சர் ஜெயக்குமார்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் - ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு என்று முதலில் குரல் கொடுத்தது தி.மு.க. அத்தோடு அந்தத் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றது தி.மு.க.! ஏன், தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் இருந்தவரை அரசுப் பள்ளி மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு உள்ளே நுழையமுடியவில்லை. அரண் போல் தடுத்து நின்றார் எங்கள் முத்தமிழறிஞர் கலைஞர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் - நெடுஞ்சாண்கிடையாக மத்திய பா.ஜ.க. அரசின் காலில் விழுந்து நீட் தேர்வை அனுமதித்தார். அது அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்த முதல் துரோகம். தேர்வு எழுதப் போன மாணவர்களைக் கம்மலைக் கழற்று, கொலுசைக் கழற்று என்று சித்திரவதைப்படுத்த இடம் கொடுத்தார். அது இரண்டாவது துரோகம். 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணமாக இருந்தது மூன்றாவது துரோகம். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாமல் கையறுநிலையில் நின்றது எடப்பாடி பழனிசாமியின் நான்காவது துரோகம்.
அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை 23 மாதங்கள் மறைத்து - உடனே நிராகரிக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிச் சட்டமாக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டது ஐந்தாவது துரோகம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதியரசர் கலையரசன் பரிந்துரையை 7.5 சதவீதமாகக் குறைத்து மசோதாவை நிறைவேற்றியது ஆறாவது துரோகம். அப்படி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவையும் 40 நாட்களுக்கும் மேலாக ஒப்புதலைப் பெறமுடியாதது மட்டுமின்றி - அவர் 3 அல்லது 4 வாரம் கால அவகாசம் கோரியதைத் தமிழக மக்களிடமிருந்து மறைத்தது ஏழாவது துரோகம்.
இப்படி துரோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை “அரசுப் பள்ளியில் படித்ததால் அந்த மாணவர்களின் கஷ்டம் தெரிந்தவர்” என்று கூறி “விவசாயி” என்ற போலி வேடம் புளித்துப் போனதால், புதிதாக இன்னொரு போலி வேடத்தை அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சருக்குக் கொடுத்திருக்கிறார். நான் கேட்கிறேன், கஷ்டம் தெரிந்ததால்தான் 13 பேரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தாரா?
“சட்டமன்றத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க. என்றாவது பேசியதுண்டா?” “இதனைச் செய்தார்களா” “இது எங்களின் மூளையில் விளைந்த திட்டம்” என்று பிதற்றியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அவர் சட்டமன்றத்திலும் தூங்குகிறார் என்பதைத் தவிர இதற்குப் பொருத்தமான வேறு பதில் இல்லை. ஏனென்றால் இந்த 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டுமல்ல; இருவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள்.
ஏன், 10 சதவீத பரிந்துரையை 7.5 சதவீதமாகக் குறைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அந்த விவாதத்தின் போது ஜெயக்குமார் தூங்கியிருந்தாலும் - நாளைக்கே சட்டமன்றத்தின் நூலகத்திற்குச் சென்று இந்த இடஒதுக்கீடு தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பேசியிருப்பதைப் படித்துப் பார்த்து - அவர் விவரம் அறிந்து கொள்ள வேண்டும்! அறியாமையின் முகட்டில் நின்று கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உண்மையிலேயே போராடும் தி.மு.க.வை எள்ளி நகையாட வேண்டாம்!
“கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு எங்கள் மூளையில் விளைந்த திட்டம்” என்கிறார் ஜெயக்குமார். பாவம் அவர். வரலாறும் தெரியவில்லை; கிராமப்புற இடஒதுக்கீடும் தெரியவில்லை. பொறியியல் கல்லூரிகளில் முதன்முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர். சாட்சாத் தி.மு.க. ஆட்சி. ஆகவே கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மூளையில் விளைந்த திட்டம். அதை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடைப்பிடித்து - அந்த இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக்கினார். ஆகவே கலைஞரின் மூளையில் உதித்ததைக் காப்பியடித்தவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. ஆட்சியில் உதித்ததை காப்பியடித்தது அ.தி.மு.க. ஆட்சி என்பதை ஜெயக்குமார் உணர வேண்டும்.
இன்னொரு அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் யாருக்கு விசுவாசமாக இருப்பது என்றே தெரியாமல் தவிக்கிறார். சேகர் ரெட்டி விவகாரத்தில் ஓ.பி.எஸ் முதல் குற்றவாளி என்றார். இன்றைக்கு ஓ.பி.எஸ். காலில் விழுந்து தலைவர் என்கிறார். என் மாவட்டத்திலேயே எனக்கு மதிப்பில்லையா என்று எடப்பாடி பழனிசாமியிடம் சண்டை போட்டார். இப்போது அவரே என் தலைவர் என்று கும்பிடு போட்டு நிற்கிறார். அது அவருக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்க சி.வி. சண்முகத்திற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அ.தி.மு.க. ஆட்சி நடத்தும் நாடகத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் சி.வி.சண்முகம் எங்கள் கழகத் தலைவரின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போராட்டத்தை விமர்சிக்க அருகதை இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் பெற முடியாத இவரெல்லாம் ஒரு சட்ட அமைச்சரா? மத்திய அரசு இந்த மசோதாக்களை நிராகரித்த அன்றே தன்மானம் இருந்திருந்தால் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் 'கண்ணெதிரே தொங்கும் கரன்சித் தோட்டத்தை விட்டு ஓடிப் போக மனமில்லாமல்' அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சண்முகம் எங்கள் கழகத் தலைவர் மீது சுட்டு விரல் நீட்டக் கூட தகுதியில்லை.
இப்போது சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை வைத்துக் கொண்டு ஆளுநர் கால அவகாசம் கேட்கிறார். அவர் கேட்கும் 4 வாரத்திற்குள் மருத்துவக் கவுன்சிலிங் முடிந்து போகும் சூழல். ஆனால் அமைச்சர் குழு என்ற பெயரில் “பா.ஜ.க. அரசின் அடிமைகளாக” ஆளுநரைச் சந்தித்தவர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ள சி.வி.சண்முகம் - சட்டமன்றத்தின் மாண்பை நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதற்கா போனார்; இல்லை!
கெஞ்சுவதற்கும், கும்பிடு போட்டு சட்டமன்றத்தின் இறையாண்மையை - ஒரு அரசின் வல்லமையை ஆளுநர் காலடியில் அடமானம் வைக்கத்தானே ராஜ்பவன் சென்றார்? தங்களின் அடிமைத்தனத்தை மறைக்க - பா.ஜ.க. அரசுடன் சேர்ந்து போடும் நாடகத்தை மறைக்க - உண்மையான உணர்வுடன் - அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைப் பாதுகாக்கப் போராடிய எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்க இந்த அமைச்சர் குழுவில் “இடம்பெற்ற” எடப்பாடி பழனிசாமியின் “நவீன அடிமைகளான” ஜெயக்குமாருக்கும், சி.வி. சண்முகத்திற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?
தி.மு.க.வின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவது அரசுப் பள்ளி மாணவர்களை - கிராமப்புற மாணவர்களைக் கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமான போக்காகும். நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது. இந்திய மருத்துவக் கழகம் மருத்துவ கவுன்சிலிங் தேதிகளையும் அறிவித்து விட்டது. நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அனைத்து கலந்தாய்வும் முடிவுக்கு வருகிறது. அதனால் எங்கள் கழகத் தலைவர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் “20 ஓவர் கிரிக்கெட் மேட்ச்” போல் ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிறார். ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரும் - சி.வி.சண்முகமும்- ஏன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் “அதெல்லாம் வேண்டாம். வெற்றியா தோல்வியா என்று இழுபறியில் உள்ள டெஸ்ட் மேட்ச் போல் இந்த மசோதா இருக்கட்டும்” என்று நாடகம் போடுகிறார்கள்.
அ.தி.மு.க.வின் இந்த “நீட் நாடகத்தின்” சாயம் தி.மு.க. போராட்டத்தால் வெளுத்துப் போய் விட்டது என்று தெரிவித்துக் கொண்டு - எங்கள் கழகத் தலைவர் கூறியது போல் இன்றோ நாளையோ 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு “முதுகெலும்பு” இருந்தால் ஆளுநருக்குக் கெடு விதித்து ஒப்புதலைப் பெறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.