தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பண்டிகை காலங்களான ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என்று அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி, ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்துக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனையடுத்து சேலம் மாவட்டத்தில், ஒரே நாளில் ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் ரவுடிகள் வேட்டையில் களமிறங்கினர். இந்த திடீர் வேட்டையில், 37 ரவுடிகள், 5 தலைமறைவு குற்றவாளிகள், பிடி ஆணை நிலுவையில் உள்ள 2 குற்றவாளிகள் உள்பட 56 பேரைச் சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் நகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் கார்த்தி, சுகேல், ஹேமதி என்கிற ஹேமதி உசேன், வெள்ளையன் என்கிற பைரோஸ்கான், உள்ளிட்ட பலரைக் கைது செய்துள்ளனர். இவர்களில், பலர் பல்வேறு குற்றச் செயல்களுக்காக அடிக்கடி கைது ஆனவர்கள்.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக யாரேனும் செயல்படுவதாகத் தெரியவந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ரவுடிகளால் மிரட்டல் இருந்தால் உடனடியாக அந்த தகவலைச் சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாநகர காவல் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 100 அல்லது 94981- 00945 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.