மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான வருவாய்த்துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்த பட்டாசு ஆலையில் உயரே சென்று வெடிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 3 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டி.கல்லுப்பட்டி போலிஸார் ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
இதனிடையே, காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் வருவாய் துறையினரின் உரிமம் பெற்றுக்கொண்டு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியைப் பெற்று தயாரிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகளை விதிமுறையை மீறி தயாரித்தது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து, திமு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.