நீட் விவகாரத்தில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தருவதாகக் கூறி பின்னால் ஏதோ திட்டம் தீட்டி மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய, மாநில அரசுகள் சீர்குலைப்பதாக கல்வியாளர் நெடுஞ்செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர், “மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் மூலம் ஒட்டுமொத்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து வருகிறது.
இந்தச் சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை நிராசையாகவே போகிறது. நீட் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கோரி தமிழக அரசு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தபோதும், ஆளுநர் தரப்பில் அதற்கு பதிலளிக்க 3 வார காலம் தேவை என இழுத்தடிக்கின்றனர்.
உள் ஒதுக்கீடு வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராடி வரும் நிலையில், 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டை வெறும் காரணமாகக் காட்டி, வேறு பெரிய திட்டம் நிறைவேற்றவே அமைச்சர்கள்-ஆளுநர் சந்திப்பு நடந்ததாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
7.5 சதவிகித உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் தரப்பில் 3 வார காலம் எடுத்துள்ள சூழலில், நவம்பர் மாதத்திற்குள் கவுன்சிலிங் முடித்து கல்லூரிகள் திறக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பாக பதில் கூற 3 வாரம் எடுத்துக்கொண்ட சூழலில், அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு இந்த ஆண்டும் தீராப்பசியாகவே அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.