பெரம்பலூர் மாவட்டம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் - விஜயலட்சுமி தம்பதியின் மகள் அம்மு என்கின்ற ரோஷ்னி (வயது 24 ). இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர் தாலுக்கா, காட்டுக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் வீரராகவன் என்பவருக்கும் 2019ம் ஆண்டு மே 18ம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லாததால், அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக வீரராகவன் ஓசூரில் வேலை பார்த்து வந்த போது, கடந்த மார்ச் மாதம் 03ம் தேதியன்று தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனால் ரோஷ்னி பெரம்பலூரில் உள்ள தனது, பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரோஷ்னி இறந்து விட்டதாக அவரது படம் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பெரம்பலூர் நகர் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து ரோஷ்னி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை, பெரம்பலூரில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட ரோஷ்னி, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் போலிஸாரிடம் புகார் அளித்தார், மேலும் இதன் பின்னணியில் தனது கணவரின் குடும்பத்தினர் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கணவரின் குடும்பத்தினர் எனது 40 சவரன் நகையை எடுத்துக்கொண்டு என் கணவர் இறந்த பிறகு என்னை விரட்டியடித்தாகவும், அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.