தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா இறப்பு விகிதம் 1.1% ஆக இருந்த நிலையில், தற்போது 1.6% அதிகரித்துள்ளது. வேறு எந்த நோய்ப் பாதிப்பும் இல்லாதவர்களும் கொரோனாவால் இறந்து வருவதாக இறப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 40,943-ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 5,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 80.44 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 8% பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி அதிகபட்சமாகச் சென்னையில் 1,295 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 448 பேருக்கும், செங்கல்பட்டில் 363 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 86,454 ஆக உள்ள நிலையில், தற்போது கொரோனா சிகிச்சையிலும், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 44,437 ஆக தொடர்ந்து அதிகறித்துகொண்டுதான் உள்ளது.
மேலும் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 68 போ் பலியாகியுள்ளனர். அதில், 8 பேருக்கு கொரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி 10,052 போ் உயிரிழந்ததாகச் சுகாதாரத்துறை கணக்கு காண்பித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 3,351 போ் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த என்ன நடவடிக்கையை எடுத்துவருகிறது இந்த அரசு என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.