பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பா.ஜ.க அரசைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசும் இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ”புதுக்கோட்டை” என எழுதி வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது, மகாத்மா காந்தி பிறந் நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி புதிர் போட்டியை தமிழக அரசு நடத்துகிறது.
திருவண்ணாமலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில், மாவட்டத்தில் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், NCERT சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி ‘புதிர் போட்டி’ ஆன்லைனில் நடக்க இருப்பதாகவும் விருப்பம் உள்ள 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
அதில், போட்டி நடைபெறும் மொழி என ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளது. “மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு", “அவருடைய மக்கள் பணிகள், “வாழ்க்கையோடு இணைந்த அவருடைய கருத்துருக்கள்”ஆகியவற்றில் நடைபெறும் போட்டிக்கு – தமிழக மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகள் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டும் மாணவர்கள் படிக்கும் நிலையில் இந்தியில் போட்டி வைத்தால் மாணவர்கள் எப்படி பங்குபெறுவார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “இந்தியில் இணைய வழி புதிர் போட்டி நடத்துவது கண்டனத்திற்குரியது!
ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தி வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தைத் தமிழக சட்டமன்றத்தில் வைத்தார். “இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம்” என்று அறிவித்து விட்டு - முதலமைச்சர் ஏன் இந்தியை இவ்வளவு வேகமாகத் தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டிருக்கிறார்?
“புதிய தேசிய கல்விக் கொள்கை 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்கிறது” என்று பிரதமரும், மத்திய கல்வித்துறை அமைச்சரும் அளித்த உறுதி என்னவாயிற்று? அந்த வாக்குறுதிகள் எல்லாம் தமிழகத்தை ஏமாற்றவா? தமிழகம் போன்று இந்தி பேசாத பிற மாநிலங்களை ஏமாற்றவா? மத்திய பா.ஜ.க. அரசின் அடிவருடியாக இருந்து, பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ் மொழிக்குத் துரோகம் செய்து “இந்தியில் கேள்வி கொடுப்பதும்” “இந்தியில் பெயர் சூட்டுவதும் ”கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தமிழக மாணவர்களுக்கு காந்தியடிகள் குறித்து இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறது எடுபிடி அரசு. இந்தியைத் திணித்து தமிழை புறந்தள்ளினால் விளைவுகள் மோசமாகும்.டெல்லிக்கு அடிமையான கூவத்தூர் கும்பல், இந்திக்கு கொத்தடிமையானது பிழைப்புவாதத்தின் உச்சம்” என கடுமையாகச் சாடியுள்ளார்.