தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி பல தனியார் பள்ளி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசின் கருவூலம் மூலமே வசூல் செய்ய வேண்டும், தனியார் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியரின் ஊதியம் அரசின் கருவூலம் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் ஊதியமாக காட்டப்படும் கணக்கு அதிகமாகவும், உண்மையில் கொடுக்கப்படும் ஊதியம் அதைவிட மிகக் குறைவாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். வருமான வரி அலுவலகம் இதன் பேரில் ஆய்வு செய்தால் மிகப்பெரிய முறைகேடு அம்பலமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.