2021ல் தி.மு.க தலைவர் முதல்வரான பிறகுதான் மாநகராட்சி தேர்தல் நடக்கும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று தி.மு.க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மீண்டும் ஆறு மாதம் நீட்டிப்பது குறித்த சட்ட முன்வடிவை எதிர்த்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.
அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மாநகராட்சி மேயர் நேரடி தேர்தல் என்றும், இன்னொருபுறம் மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் என்றும் மாநகராட்சி தேர்தல் நான்கு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லாமல் மாநகராட்சி இருந்து வருகிறது.
தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்; குறைத்து இருக்கலாம். ஆனால் தமிழக அரசுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் எண்ணமே இல்லை.
சென்னை மாநகராட்சியில் இன்று வரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 3,004 பேர் இறப்பு என 150 நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தற்போது ஒரே மாநகராட்சியில் ஏற்பட்டுள்ளது.
தற்போது தனி அலுவலர்கள் பணிக் காலம் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர்கள் காலநீட்டிப்பிற்கு நகைச்சுவையான காரணங்களைக் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது தமிழக அரசுக்கு தேர்தலை நடத்தும் திட்டமே இல்லை.
1996 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது கால் நூற்றாண்டுக்குப் பிறகு மாநகராட்சி தேர்தல் நடந்தது. ஆக, 2021ல் தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் வந்த பிறகுதான் இந்த மாநகராட்சி தேர்தல் நடக்கும்” எனத் தெரிவித்தார்.