தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சேலை, வேட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் நெசவு தொழில் என்பது பிரதானமாக உள்ள நிலையில், இவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் நெசவாளர்களின் பங்களிப்புடன் ஆண்டிபட்டியில் வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
இதையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள டி.சுப்புலாபுரம் விலக்கில் இடம் தேர்வு செய்யப்பட்டு விசைத்தறி கூடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தமிழக அரசின் அலட்சியத்தால் அரசு மற்றும் நெசவாளர்களின் நிதி உரிய வகையில் வழங்கப்படாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் கட்டப்பட்ட அந்த விசைத்தறி கூடங்கள் எந்த பயனுமின்றி கிடக்கின்றன. இதனால் இந்த கட்டடத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து தவறுதலாகப் பயன்படுத்தி வருகின்றனர். நெசவாளர்களின் கனவுத் திட்டமான உயர் தொழில்நுட்ப விசைத்தறி பூங்கா திட்டத்தைச் செயல்படுத்தத் அதிமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதனையடுத்து விசைத்தறி கூடத்தை மீட்டு நெசவாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டிபட்டி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.