மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதிகாரிகள் மதிப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு கல்லிடைக்குறிச்சி சேர்ந்த சிவசங்கரன் உயர்நீதிமன்ற கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் எங்கள் பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஓடை தடுப்பணை உள்ளது. இந்த வழியாக செல்லும் ஓடை நீர் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றில் சென்று கலக்கும் வண்டல் ஒடை தடுப்பணை மூலம் நீர் ஆதாரம் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் அதிகரிக்க காரணமாக உள்ளது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மேனுவல் ஜார்ஜ் என்பவர் எங்கள் பகுதியில் எம் சாண்ட் குவாரி அமைப்பதற்காக அனுமதி பெற்றுள்ளார். அவர் இதன்மூலம் கடினமான பாறைகளை எடுத்து அதனை உடைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் அவர் எங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு சட்டவிரோதமாக மணலை அளவுக்கு அதிகமாக அள்ளி விற்று வருகிறார். இவர் தினமும் இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகள் வரை இந்த மண்ணை அள்ளி கடத்தி விற்பனை செய்து வருகிறார்.
இதனால் எங்கள் பகுதியில் நீர் ஆதாரம் எங்கள் பகுதியில் விவசாயம் முக்கியம் அதற்காக அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை ஆய்வு செய்வதற்காக, ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து இப்பகுதியில் மண் கடத்துவது குறித்து ஆய்வு செய்து இதனை தடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார் .
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் மணல் கடத்தல் என்பது காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும், மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.