கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த நிலையில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..
இந்து முன்னணியினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவோம் என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.