கொரோனா அச்சுறுத்தலால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி இருக்கும் சூழலில் சமூக விரோதிகள் பள்ளிகளை சேதப்படுத்தி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் அரசுப் பள்ளிகள், நிர்வாகத்தின் கண்காணிப்பின்றி இருக்கும் நிலையில் சேதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி, கொரோனா ஊரடங்கு காலத்தில் சமூக விரோதிகளால் மிகக் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டம் கொண்டல் என்னும் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளி கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வரை இயங்கிக் கொண்டு இருந்த அந்தப் பள்ளி ஐந்தே மாதங்களில் மிகுந்த அவல நிலைக்கு ஆளாகியுள்ளது. பள்ளியின் சுவரை உடைத்து அங்கிருந்த ஆய்வக உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ள சுப.வீரபாண்டியன், “எதிர்காலத்தில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்து, பல சிறிய பள்ளிகளை மூடிவிடுமோ என்ற அச்சம் என்னைப் போன்றோருக்கு உள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் பிள்ளைகளின் கல்வி இப்போதே இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது. காலகாலமாகப் படிப்பு மறுக்கப்பட்ட சமூகம் இப்போதுதான் ஒரு நூற்றாண்டாய் பள்ளிகளுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்குள் அவர்களின் உரிமைகளும், உடைமைகளும் பறிக்கப்படுகின்றன.
இதனைக் கொண்டல் ஊராட்சித் தலைவரின் கவனத்திற்கும், ஊர்ப் பெரியவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லவே இப்பதிவு. எதுவும் பயனில்லை என்றால், அடுத்தகட்ட முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
வாருங்கள், அந்தப் பள்ளி சீர் செய்யப்பட்டு, மீண்டும் இயங்கும்வரை அனைவரும் இணைந்து ஆனதைச் செய்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.