தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் பேசியதன் விவரம் பின்வருமாறு :
• தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் இறப்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்? தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
• தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்களின் விவரங்கள் குறித்து , ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு செய்தியும், 20 மருத்துவர்கள் இறந்ததாக மற்றொரு விதமான செய்தியும் வெளிவந்துள்ளன.
• எனவே, தமிழக அரசு உடனடியாக சரியான புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டும்.
• கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு - தனியார் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிவரங்களை அரசு தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும்.
• மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
• கொரோனாவால் இறந்த அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறைச் சார்ந்த நிரந்தர ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவது போல், அரசு மருத்துவனைகளில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த மற்றும் வெளிக்கொணர்தல் முறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். தனியார் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கும் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
• தமிழகத்தில் இது வரை இறந்த மருத்துவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேல் தனியார் மருத்துவர்களாவர். தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.அவ்வாறு ஈடுபடாவிட்டால், மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
• உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு மிரட்டுகிறது. ஆனால், அதே சமயத்தில், அந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கொரானாவால் இறந்தால் இழப்பீடு தர மறுக்கிறது. கடமையை செய்ய வலியுறுத்தும் அரசு, உரிமையை தர மறுப்பது சரியல்ல. அவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பொருளாதார பாதுக்காப்பு வழங்க மறுப்பது நியாயமல்ல. தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும், தமிழக அரசின், இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது.
• கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு அரசு ரூபாய் 2 லட்சம் நிவாரண உதவி வழங்குவது வரவேற்புக்குரியது. அதை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
• அரசு மருத்துவர்கள் ஆற்றும் அளப்பரிய, கடுமையான பணியை முதல்வர் தொடர்ந்து பாராட்டி வருகிறார். இது வரவேற்புக்குரியது. ஆனால், அதே சமயம், அவர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு கோரிக்கை கடந்த 2 ஆண்டுகளாக பரிசீலிக்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவத் துறையில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது முன்னோடியாக திகழும் தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு நீண்ட காலமாகவே மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.
• நியாயமான ஊதியம் வழங்கக் கோரி போராடிய அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது. அரியானா மாநில அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் மருத்துவர்களின் சேவையை பாராட்டி ஊதியத்தை பல மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
• சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தையும், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்பட்டிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தையும் உயர்த்த வேண்டும். மாதாமாதம் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
• ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் உட்பட அனைவரின் ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும் என, தமிழக அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.