தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெரும் தலைவர்களை காவி கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவமதிக்கும் செயல் நடந்தேறி வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் எப்படியாவது தங்களது கட்சியையாவது நிலைநாட்டிட வேண்டும் என்று பாஜகவினர் பகல் கனவு கண்டு வருகின்றனர்.
ஆகையால் சமூக வலைதளங்கள் மூலம் பெரியாருக்கு எதிரான வன்மங்களை கக்கி வருகிறது இந்த காவி கும்பல். அதன்படி, கடந்த வாரம், விடுதலை நாளேட்டை ஆதாரமாகக் கொண்டு பெரியார் குறித்து பொய்யான செய்தியைப் பரப்பிய பட்டுக்கோட்டை பாஜகவைச் சேர்ந்த தியாகராஜன் கார்த்திகேயன் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தினரின் புகாரின் பேரில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அதேபோல, இந்து முன்னணியைச் சேர்ந்த சிவாஜியும் கைது செய்யப்பட்டார். அந்த வகையில் கோவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற நபரும் அன்னூர் போலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஹேர் லைன்ஸ் நந்தா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தந்தை பெரியாரை இழிவாக சித்தரித்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் புகார் அளித்ததன் பேரில் அந்த நந்தகுமார் 3 பிரிவுகளின் கீழ் அன்னூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து 2 வாரமாக தலைமறைவாக இருந்த பாஜக உறுப்பினர் நந்தகுமாரை கணேசபுரம் அருகே கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.