கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தின் மீது நள்ளிரவில் காவித் துணி போடப்பட்டு, அருகே குப்பைகள் கொட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவித் துணி போடப்பட்ட செயலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி குழித்துறையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் காவிக் கொடியை ஏற்றி வைத்த காவிக் காலிகளின் கீழ்த்தர செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவித் துண்டு அணிவித்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள். அதற்குமுன் கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி சாயம் பூச்சு.
அதற்கு சில மாதங்களுக்குமுன் தஞ்சையில் வள்ளுவர் சிலைக்குக் காவிச் சாயம் போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள்மீது கடுமையான சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படிப்பட்ட அருவருப்பான அரசியல், ‘இந்து மத காவலர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் இவர்களால் இப்படி தொடருமா? அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக - மதக் கலவர பூமியாக்கிடும் முயற்சிகள்தான்.
இப்படிப்பட்டவர்கள்மீது மென்மையான ஒருதலைபட்ச முந்தைய நடவடிக்கைகள்தானே இந்தத் துணிச்சலை அவர்களுக்குத் தருகிறது. தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாமா?
‘‘காவி புனிதத்தின் சின்னம்தானே’’ என்று, பா.ஜ.க.வினர் செய்ததை நியாயப்படுத்தி விளக்கம் தருவது எவ்வளவு திமிர் பேச்சு - பேசியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டாமா?
‘புனித கங்கை’ என்பதைச் சுத்தப்படுத்த 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், உச்சநீதிமன்ற கண்டனத்திற்கும் ஆளான இவர்கள் கூறும் ‘புனித’த்தின் பொருள் அதுதானா?
ஏன் இந்த விஷம வேலை? இதில் அம்புகளைத் தண்டிப்பதில் பயனில்லை; எய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து, சரியான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முன்வருதல் அவசிய, அவசரக் கடமையாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.