தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டால் கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்க்கதியாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (சட்டம் மற்று பயிற்சி) செய்தி ஒன்றை அனைத்து மாவட்ட மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள 23 மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 128 மத்திய கூட்டுறவு வங்கி, 4,250 நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அ.தி.மு.க அரசு! கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.