நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் மாரிதாஸ் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்தியல் ரீதியாக பதில் பேச முடியாத வலதுசாரிகள், பின்பற்றும் ஒரே யுக்தி பொய் செய்தி. ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்பதே அவர்களின் அற்ப அரசியல் கொள்கை. அப்படி திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவதில் முதன்மையானவர் மாரிதாஸ் என்பவர்.
ஒரு தேர்ந்த அரசியல் ஞானி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, பொய்களை அவிழ்த்துவிட்டு வரும் மாரிதாஸ், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளார்களை அவதூறாக சித்தரித்து மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆராய்ச்சி என்ற பெயரில் அபத்தங்களை பேசியிருந்தார்.
அதில் , நியூஸ் 18 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மீது ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை உண்மைக்கு புறம்பாக திரித்து, நியூஸ் 18 குழும தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளார்கள் மீது வெளிப்படையாக அவதூறுகளை சுமத்தியது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல தரப்பிலும் கண்டனங்கள் பறந்தன. இந்நிலையில், நியூஸ்18 தலைமையிடம் இருந்து தனக்கு மின் அஞ்சல் மூலம் பதில் வந்திருப்பதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மாரிதாஸ்.
நியூஸ்18 ஆசிரியர் வினய் சராவகி என்பவரிடம் இருந்து அந்த பதில் வந்ததாகவும், குற்றச்சாட்டுகளை நியூஸ்18 தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது என, அந்த மின் அஞ்சலை காட்டினார். ஆனால், விசாரித்ததில், நியூஸ் 18 தலைமை அப்படி எந்த ஒரு பதிலையும் தரவில்லை என தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, மாரிதாஸ் குறிப்பிட்டுள்ள நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகி, தனது பெயரில் போலி மின் அஞ்சல் வளம் வருவதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்திருந்தார்.
இந்நிலையில், அவதூறு பரப்புவது, போர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துகளை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றங்களில் அடிப்படையில் மாரிதாஸ் மீது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாரிதாஸ் மீது விரைவில் போலிஸார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.