வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 8 செ.மீ. மழையும், காரையூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வடக்கு குஜராத் கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், மத்தியகிழக்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வருகிற 12-ஆம் தேதி வரையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.