சாத்தான்குளம் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என ஒரு வாரம் கடந்த பின்னர் ட்வீட் செய்துள்ள ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் போலிஸாரால் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், போலிஸ் ஸ்டேசனில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில போலிஸார் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் கொடூரச் சம்பவத்தால் தமிழகமே அதிர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி குரல் எழுப்பிய நிலையில், ஒரு வாரம் கழித்து மெதுவாக வந்து அதுவும், நீதிமன்றத்தில் போலிஸாரின் நாடகங்கள் அம்பலப்பட்ட பிறகு குரல் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் ட்வீட்டைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அதில், “தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க முதல்வரை வலியுறுத்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பிரதமரையும், பா.ஜ.க அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.” எனவும் பா.ஜ.க-வை சாடியுள்ளார்.