நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தக் கோரச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. மேலும் 5 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இன்று மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனல் மின் நிலைய யூனிட்களில் ஏற்படும் பழுதுகளை சரிவர நிவர்த்தி செய்யாமல் இயக்கும் நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.