கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என்ற தந்தை மகனை போலிஸார் அநாவசியமாக கைது செய்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கி சிறையிலேயே வைத்து கொன்றுக் குவித்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலிஸாரின் இந்த அதிகார வன்முறை சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு அப்பாவிகளை அநியாயமாக படுகொலைக்கு ஆளாக்கி அக்குடும்பத்தினரை நிர்கதியாக்கிய காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி அப்பகுதி மக்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரரகள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியலுக்கு வரப்போவதாக கால் நூற்றாண்டாக கூறிவரும் நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவத்துக்கு எதிராக தனது கருத்தையும் நிலைப்பாட்டையும் தெரிவிக்காதது ஏன் என சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில், அவரது திரைப்பட மக்கள் தொடர்பாளர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் கொலையுண்ட ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான செல்வராணியிடம் தொலைபேசி மூலம் அழைத்து இரங்கல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக ரஜினிகாந்த் எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியாகாததால் இது ஏதோ படம் தொடர்பாக தகவல் போன்று தனது பி.ஆர்.ஓவை வைத்து கூறியிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உண்மையில் ரஜினிகாந்த் ஜெயராஜின் குடும்பத்தினரிடம் பேசியிருந்தால் அவரே ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.