லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “சாத்தான்குளம் மார்க்கெட்டில் எங்களுக்கு சொந்தமாக செல்போன் கடை உள்ளது . கடந்த 19ம் தேதி இரவு கடையை விரைவாக அடைக்குமாறு சாத்தான்குளம் எஸ்.ஐ ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
பின்னர், கடையில் இருந்த எனது கணவர் ஜெயராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த தகவலறிந்து எனது மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார் . அப்போது போலிஸார் எனது கணவர் மற்றும் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரையும் பொய் வழக்கில் கைது செய்து சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சமூக இடைவெளி காரணமாக இருவரையும் மாஜிஸ்திரேட்டிம் பேச அனுமதி மறுத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த நிலையில் எந்தவித சிகிச்சையும் வழங்காமல் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இருவருக்கும் எந்தவித சிகிச்சையும் அளிக்காத நிலையில், உயிரிழந்துள்ளனர். இருவரது மரணத்திலும் சந்தேகம் உள்ளது. இருவரது உடலையும் மூன்று மருத்துவர்களுக்கு குறையாத குழுவினர் பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும், வீடியோ பதிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, இருவரது உடலையும் , பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தென் மண்டல காவல் துறை ஐ.ஜி. ஷண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபல் வீடியோ காண்பரன்சிங் மூலம் ஆஜராகினர், அப்போது ஐ.ஜி.தரப்பில் எஸ்.ஐ. பால கிருஷ்ணன்,ரகு கணேஷ் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கோவில்பட்டி மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரிப்பதற்கு ,மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து தரவேண்டும். அதில் எவ்வித குறுக்கீடும் இன்றி விசாரணை நடத்த வேண்டும். அனைத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் பிரேத பரிசோதனையின் போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. உடனடியாக வழக்கு பதிவு போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது முதலில் அவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், தூத்துக்குடி காவல்துறை எஸ்.பி. ஜூன் 26 ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க டி.ஜி.பி உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.