வெடி மருந்துகளால் விலங்குகள் பலியாவதும், காயமடைவதும் சமீபகாலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கேரளாவில், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து வைத்ததால் கர்ப்பிணி யானை உயிரிழந்ததும், இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை உருண்டையில் வெடியை வைத்து கொடுத்ததில் கடுமையான காயமுற்றதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வகையில், இதே போன்றதொரு வெடியை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்ட திருச்சி மாவட்டம் அலகரை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனும் பலியாகியுள்ளான். அலகரை மேற்கு பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் தனது அண்ணன் கங்காதரனுடன் இணைந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம், மணமேடு காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக கங்காதரன், பூபதி மற்றும் உறவினர் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் சென்றுள்ளனர். மீன் பிடிப்பதற்காக 3 வெடி மருந்துகளை கொண்ட ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளனர். அந்த மூன்றில் இரண்டை பயன்படுத்திவிட்டு எஞ்சிய ஒரு ஜெலட்டினை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் பூபதி.
அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பூபதியின் ஆறு வயது மகன் விஷ்ணு அந்த ஜெலட்டின் குச்சியை தின் பண்டம் என நினைத்து கடித்திருக்கிறான். அப்போது குச்சியில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் சிறுவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.
வலியால் துடிதுடித்த சிறுவன் விஷ்ணு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே உயிரிழந்திருக்கிறான். வெடிமருந்து வைத்திருந்தது வெளியே தெரியவந்தால் விவகாரமாகிவிடும் என்பதால் உடனடியாக சிறுவனுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்திருக்கிறார் தந்தை பூபதி.
இந்த விவகாரம் தொடர்பாக முசிறி போலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுவனன் தந்தை, பெரியப்பா மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், தமிழரசன் என்பவருக்கும் வலைவீசியுள்ள போலிஸார் வெடி மருந்து எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.