தமிழ்நாடு

“தேர்வெழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - தி.மு.க எச்சரிக்கை!

தேர்வு எழுதச் செல்லும் ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை தி.மு.க இளைஞரணியும், மாணவரணியும் சும்மா விடாது என தி.மு.க இளைஞரணி, மாணவரணி செயலாளர்கள் கூட்டாக எச்சரித்துள்ளனர்.

“தேர்வெழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - தி.மு.க எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்வு எழுதச் செல்லும் ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை தி.மு.க இளைஞரணியும், மாணவரணியும் சும்மா விடாது என தி.மு.க இளைஞரணி, மாணவரணி செயலாளர்கள் கூட்டாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“கொரோனா வைரஸ் தொற்றைக் கருத்தில்கொண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தியும் அல்லது தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்த பின்பு 10-ம் வகுப்பு பொதுதேர்வை நடத்தக் கோரியும் இளைஞரணி-மாணவரணி செயலாளர்களாகிய நாங்கள் இருவரும் இணைந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கடந்த மாதம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினோம். இதேபோல் எங்கள் அணிகளின் பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இப்படி பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த நியாயமான எதிர்ப்புகளால் தேர்வை 15 தினங்களுக்கு தள்ளிவைத்தது அரசு. ஆனால் திடீரென்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் வரும் 15-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சூழலில் கொரோனா வைரஸின் பாதிப்பு இப்போதுதான் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்து ஐநூறைத் தாண்டுகிறது. சென்னையில் மட்டுமே சராசரியாக நாளொன்றுக்கு ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இவை அரசே வெளியிடும் புள்ளிவிவரம். ஆனால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள். பாதிப்பு குறைவாக இருக்கும்போது ஊரடங்கை அமல்படுத்தி, பாதிப்பு அதிகமாக இருக்கும்போது ஊரடங்கை முற்றும் தளர்த்தி அடிப்படை மருத்துவ அறிவுக்கு எதிராகச் செயல்படும் ஒரே அரசு மத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும்தான்.

கொரோனாவால் மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதே நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனெனில் சுமார் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். பொதுப் போக்குவரத்தில் பயணித்து அவர்கள் தேர்வறைக்கு வந்து சேரவேண்டும்.

வீட்டிலிருந்து கிளம்பி பயணித்து தேர்வறைக்கு வரும் நிலையில் ஏதேனும் ஒரு புள்ளியில் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்த அரசால் உத்தரவாதம் தர முடியுமா?

“தேர்வெழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - தி.மு.க எச்சரிக்கை!

அதுவும் குழந்தைகளுக்கு தொற்று எளிதாக ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருதுகிறார்கள். இங்கு தொட்டால் பரவி விடுமோ, அங்கு தொட்டால் பரவி விடுவோ என்ற பதற்றத்திலேயே மாணவர்கள் தேர்வறைக்குப் பயணிக்க வேண்டியிருக்கும். அதுபோக போதுமான அளவு கழிப்பறைகள் இல்லாத சூழலில் கழிவறைகள் தொற்றுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். அதோடு மட்டுமா? பத்தாம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பாளரான தேர்வுத்துறை இணை இயக்குநர் உட்பட ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வருத்தமளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட பதற்றமான சூழலில் தேர்வறை எழுத பள்ளிக்கூடங்களுக்கு பயணிக்கும் மாணவர்களால் மனதை ஒருமுகப்படுத்தி எப்படி தேர்வெழுத முடியும்? கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்க நிலையிலிருந்தபோதே 12-ம் வகுப்பின் கடைசித் தேர்வுக்கு சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டதாக இந்த அரசுதான் அறிவித்தது. இத்தேர்வுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை என்று இந்த அரசால் உறுதியாகக் கூறமுடியுமா?

மருத்துவ வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு முன்னேற்பாடுகள் செய்து தேர்வை நடத்தும் தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது. கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என்று சொல்கிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. தமிழக முதல்வரோ எந்தவித ஆய்வும் அக்கறையுமின்றி கொரோனா இன்னும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் என்கிறார்.

இந்த மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனத்தைக் கருத்தில் கொண்டுதான் இந்த அரசுக்கு மருத்துவ முன்னேற்பாடுகள் செய்து தேர்வை நடத்தும் திறமையோ தகுதியோ இல்லையென்று மக்கள் கருதுகிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் அறிவையோ அருகதையையோ இந்த அரசு இழந்து விட்டது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் மக்கள்.

எனவேதான் நாங்கள் சொல்கிறோம், பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் என மூன்று தரப்பினரின் அச்சத்தை மனதில் கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். நடத்தியேதான் தீரவேண்டும் என்றால் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் 10 முதல் 15 தினங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி முடித்த பிறகு தேர்வை நடத்துவதே சரியான முடிவாக இருக்கும்.

அதை விடுத்து ‘நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். தேர்வை நடத்தியே தீருவோம்’ என்று இந்த அரசு அடம்பிடித்தால் அதன் பின்விளைவுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் எதிர்காலமான அப்பாவிக் குழந்தைகளின் உயிரோடு விளையாடினால் அதற்கான பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமியே ஏற்க வேண்டியிருக்கும். தொடர் ஊழல்களில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு ஏனிந்த தேர்வை நடத்த இவ்வளவு அவசரப்படுகிறது என்ற உண்மையான காரணங்களை ஊருக்கு அறிவிக்க வேண்டும்.

மருத்துவ முன்னேற்பாடுகளைச் செய்யாமல் உலக மருத்துவ நியதிகளுக்கு எதிராக, குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இந்த முடிவை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இந்த அரசு தொங்குவதற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னாலும் ஏதேனும் அலாவூதீனின் ஊழல் விளக்குப்பூதம் ஒழிந்திருக்கிறதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

எனவே உங்கள் வீண் பிடிவாதத்தை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு உடனடியாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை தள்ளி வைக்க வேண்டும். அல்லாமல் விடாப்பிடியாக இந்தத் தேர்வை நடத்தியே தீருவோமென்று அரசு அடம்பிடித்து நின்றால் நாளை ஏற்படும் இழப்புகளுக்கு இந்த அரசே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை தி.மு.க இளைஞர் அணியும் மாணவர் அணியும் சும்மா விடாது.

எனவே மருத்துவ உண்மைகளை உணர்ந்து தேர்வை நடத்தும் இந்த முடிவை உடனடியாக தள்ளி வையுங்கள். அல்லது தி.மு.க இளைஞர் அணியும், மாணவர் அணியும் தி.மு.க தலைவரின் ஒப்புதலைப் பெற்று உங்களைக் களத்தில் சந்திக்கும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories