புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் வித்யா. இவர் கடந்த மாதம் 18ம் தேதி வீடு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள தைலமரக் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வித்யா காயங்களுடன் கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். வித்யாவின் உடைகள் கிழிக்கப்பட்டு சிதறிக்கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இந்நிலையில், சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் போலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது. பன்னீர்செல்வம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனக்கு அதிக பணமும், புதையலும் கிடைக்க வேண்டுமென்றால் மகளைப் நரபலி கொடுக்க வேண்டுமென ஒரு மாந்தீரிகவாதி கூறியதாகவும், அதனாலேயே மகளை நரபலி கொடுத்ததாகவும் பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் நானும் எனது உறவினர் குமாரும் சேர்ந்து வித்யா அதிகாலையில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்தோம் என ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகிய இருவரையும் கந்தர்வகோட்டை போலிஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மாந்திரிகவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி என்பவரை போலிஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தலைறைவாக இருந்த மாந்திரிகவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் நரபலி கொடுத்தால் பணம்சேரும் என்ற நம்பிக்கையில் ஒரு கூட்டம் இன்னமும் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.