இந்தியாவில், மகாராஷ்டிராவின் மும்பைக்கு பிறகு தமிழகத்தின் சென்னையில்தான் அதிகப்படியான கொரோனா பாதிப்புகள் தினந்தோறும் பதிவாகி வருகிறது. 400, 500 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 800, 900 என்ற எண்ணிக்கையிலேயே பதிவாகிறது.
அதற்கு இணையாக உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களை அனைவருமே கொரோனாவில் இருந்து பூரணமாக மீண்டு வந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், அறிகுறிகளற்ற பாதிப்பாக இருப்பதால் மாத்திரிகைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்தநிலையில், ஏற்கெனவே சென்னையில் கொரோனா பரவல் சமூக அளவில் அதிகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் அ.தி.மு.க அரசு, கொரோனாவால் நிகழும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் திட்டமிட்டு மறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் நாள்தோறும் 10க்கும் அதிகமானோர் என 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள 4 முக்கிய மருத்துவமனைகளில் மட்டுமே 350க்கும் அதிகமான உயிரிழப்புகள் கொரோனாவால் நடந்திருப்பதாகவும், அந்த பலிகள் வேறு நோய்களால் நிகழ்ந்தவை என கேஸ் டைரியில் மாற்றி எழுதி வருகிறது அரசு.
உதாரணமாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரிசில்லாவுக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது என அறிக்கை வெளியிட்டுவிட்டு பின்னர் நீரிழிவு நோயால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை டீன் கூறியிருந்தார். பிரிசில்லாவை போன்று நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்ததை அரசு மறைத்து வருகிறது.
மேலும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள மயானங்களில் கடந்த மாதத்தில் மட்டுமே 400க்கும் அதிகமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், உயிரிழப்பவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லையெனக் கூறிவிட்டு, அவர்களது உடல்களை அடக்கம் செய்யும்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை கையாளும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், அங்கு நிகழும் மரணங்கள் எத்தனை என்பதை பெரும்பாலும் அரசு கணக்கில் காட்டுவதேயில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டும் கொரோனா பரிசோதனை நிலவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை.
ஆகையால், கொரோனா பாதிப்பு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றவேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், அதனைச் செய்யாமல், இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது என வாய்ப்பந்தல் இட்டுவருவது கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.