தமிழ்நாடு

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசின் சார்பில் 12,500 ரூபாய் வழங்கிட வேண்டும் என தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு முறையை செயல்படுத்திடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் : 1

அகில இந்தியத் தொகுப்பில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்திடுக!

“நீட்” தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியை எட்டாக் கனியாக்கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களிலும், சமூக நீதியைத் தட்டிப் பறித்து, சமூக அநீதியை உருவாக்கிடும் விதமாக - கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டைச் உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்துள்ள இடங்கள் பூஜ்யமே. மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. “நீட் தேர்வு செல்லாது” என்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக ரத்து செய்ய வைத்த மத்திய பா.ஜ.க. அரசு, பன்னெடுங் காலத்திற்கு முன்பே, நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு சமூக நீதி அடிப்படையில், கிடைத்திடப் பெற்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போக வைக்கும் விதமாக, முது நிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை வஞ்சிப்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

அகில இந்திய தொகுப்பில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையினை நடத்தும் மருத்துவக் கலந்தாய்வுக்குழுவின் ‘மருத்துவ மேற்படிப்புக் கல்வி ஒழுங்குமுறை 2000’-ன்படி, ‘மருத்துவப் படிப்புக்கான இடங்களில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் நடைமுறைப்படுத்தும் இட ஒதுக்கீடு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

“Postgraduate Medical Education Regulations, 2000”.

9 (IV): The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum-Entrance Test and candidates shall be admitted to Postgraduate Courses from the said merit lists only.

மேலும், இளநிலை மருத்துவபடிப்பிற்கான வழிமுறைகளில்;

“Regulations on Graduate medical education, 1997”

Clause 5: (5) (iii). The reservation of seats in medical colleges for respective categories shall be as per applicable laws prevailing in States/ Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum- Entrance Test and candidates shall be admitted to MBBS course from the said lists only.

ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) தமிழக அரசு ஒப்படைக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை, எந்தவிதக் குறைப்பாடும் இன்றி, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும். இடஒதுக்கீட்டை பொறுத்தவரை, மாநில அரசுகள் ஏற்கனவே கடைபிடித்து வரும் சதவீதப்படி, மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோலவே பட்டியிலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டையும் மாநில அரசுகள் வழங்கும் விகிதசாரப்படி, இடஒதுக்கீடு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

“கடிதம் எழுதுகிறோம்” “கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று “நீட் தேர்வு விவகாரத்தில்” தமிழக மாணவர்களை காலை வாரியது போல் அதிமுக அரசு இதிலும் “விபரீத விளையாட்டு” நடத்தாமல் மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சட்டப் போராட்டத்தினை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தீர்மானம் : 2

கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம்!

அ.தி.மு.க அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 10 சதவீதமான 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிவாரணத் திட்டம் என்று அறிவித்த பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் - அவரது நிதியமைச்சர் மூலம், 1.86 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீத பொருளாதார நிவாரணத் திட்டத்தை மட்டும் வெளியிட்டு, நாட்டு மக்களை ஏமாற்றியிருப்பதோடு, மாநில அரசுகள் கோரும் நிதியையும் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

ஏழைகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு - குறு - நடுத்தரத் தொழில் முனைவோர், மற்றும் நடுத்தர மக்களுக்கு, உண்மையிலேயே உதவிடும் வகையிலும், அடிப்படைப் பொருளாதாரத்தை ஊக்குவித்திடும் முறையிலும், ரொக்கமாக எவ்வித நிவாரண உதவியும் (Cash Relief) அளிக்காமல் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

பொருளாதார ரீதியாக, கீழ் படிநிலைகளில் உள்ள 50 சதவீத குடும்பங்களுக்கு, ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்பதையோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மறு வாழ்விற்கு தேவையான பண உதவி செய்திட வேண்டும் என்பதையோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதையோ, சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு. தற்போது தினமும் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் எவ்வித ஆக்கபூர்வமான பாதுகாப்புத் திட்டங்களும் இன்றி- மொத்தமாக தளர்த்தி- பெயரளவிற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது வேதனைக்குரியது.

சென்னையில் பெருகி வரும் நோய் பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கினை படிப்படியாகத் தளர்த்தி வரும் மாநில அதிமுக அரசு, மக்களைப் பாதுகாக்கவும் திட்டமின்றி, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் முழுமையான ஏற்பாடுகள் ஏதுமின்றி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்காமலும்; “ஊரடங்கிற்குப் பிறகான நிவாரணம் மற்றும் பொருளாதாரத் திட்டங்களும்” ஏதுமின்றி, மத்திய பாஜக அரசின் கையை எதிர்பார்த்து, செயலிழந்து நிற்கிறது.

கொரோனா பேரிடரால் 2020-2021 ஆம் ஆண்டிற்கான, மத்திய - மாநில அரசுகளின் நிதி நிலை அறிக்கைகளே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கின்றன. கொரோனா நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில் தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு “கொரோனா நோயை” கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி கண்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள கொரோனா நோய் பாதிப்பில் சென்னை பத்தாயிரத்தையும் தாண்டி முதலிடம் வகிக்கிறது.

கட்டுக்கடங்காமல் தினமும் நோய்த் தொற்று பரவி வருவதையும், பரிசோதனை விபரங்களை மாவட்ட வாரியாக வெளியிட மறுத்து வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவதையும் மறுத்து வருவதை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அதிர்ச்சியுடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. அதிமுக அரசின் சார்பில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை; ஊரடங்கு அறிவிப்பதில் குழப்பம்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி அளிக்கவில்லை; தங்கள் உயிரை பணயம் வைத்து, மக்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது;

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும்- விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்- பாதிப்பிற்கும், வாழ்வாதார இழப்பிற்கும் உள்ளான யாருக்கும் உதவி செய்யாமல் கைவிரித்தது; அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஊழல்; “ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கை” அவசரகதியில் அறிவித்தது, தாய்மார்கள் கண்ணீர் சிந்தி - கைகூப்பி எதிர்த்தும், பிடிவாதமாக உச்சநீதிமன்றம் வரை சென்று ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்தது, அரசியல் கட்சிகளை அழைத்து- ஜனநாயக ரீதியில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்காமல் புறக்கணித்தது, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் பரவலாக்காமல், மையப்படுத்தி முக்கியத்துவம் பெற முயற்சி செய்வது, என அனைத்து முனைகளிலும் தோல்வி கண்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.

ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தின் நிதி ஆதாரம், பொருளாதார மீட்சி, தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் ஏதுமின்றி, “விளம்பரத்திற்காக” மட்டுமே குழுஆலோசனைக் கூட்டங்களை நடத்தி; தினமும் பரவி தீவிரமாகி வரும் கொரோனா நோய்த் தொற்று பற்றியும் - துயரத்தில் மூழ்கியுள்ள மக்களின் நிலை பற்றியும், கண்ணோட்டமின்றி இருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழ்நாட்டில் - குறிப்பாக சென்னையில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்ற உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேறு மாநிலங்களிலும், உலகத்தில் பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு பாதுகாப்பாக திரும்ப மத்திய- மாநில அரசுகள் கட்டணம் ஏதுமின்றி, உரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்போர்க்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும்; மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோர்க்கு 5000 ரூபாயும்; வழங்கிட வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தீர்மானம் : 3

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் -2020-ஐ “த் திரும்பப் பெறுக!

கொரோனா ஊரடங்கு நெருக்கடி நேரத்தில் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம்-2020” மசோதாவின் மீது கருத்துக் கேட்கும் வைபவத்தை நடத்தி - நாட்டிற்கே முன்னோடியாக, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அறிமுகப் படுத்தப்பட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு, வேளாண்மை முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்துவரும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யவும், அதன் மூலமாக மாநில உரிமைகளை மேலும் பறித்திடவும், உள் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களெல்லாம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர் - உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” நியமிப்பது, ஐந்து பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் இந்திய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்துக் கொள்வது,

தமிழ்நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடுவது, “மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்” உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” (Electricity Contract Enforcement Authority)

ஒன்றே தீர்வு காணும் என்பது - மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வழி திறந்து; மாநில உரிமைகளைக் கையகப்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தளங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டு வரப்படும்; இந்த “புதிய மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவை” உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கவேண்டும்” : தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தீர்மானம்: 4

தன்னலமற்று பணியாற்றும் மருத்துவர் - செவிலியர் - தூய்மை பணியாளர் - சுகாதாரப் பணியாளர்கள் -காவல்துறையினரின் சேவைக்கு பாராட்டு

கொரோனா பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் மிக முக்கியப் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியாளர்கள் அனைவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கும், இரவு பகல் என்று பாராது உழைத்து வருவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனமுவந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், இனி வரும் நாட்களிலும் அரசின் "சுகாதார அறிவுரைகளுக்கு" மதிப்பளித்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து- சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

banner

Related Stories

Related Stories