தமிழ்நாடு

“கோவை மாநகராட்சி உதவி ஆணையருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு : மர்மம் என்ன?” - கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்கு தொடர்ந்து 3வது ஆண்டாக பணி நீட்டிப்பு ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

“கோவை மாநகராட்சி உதவி ஆணையருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு : மர்மம் என்ன?” - கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்கு தொடர்ந்து 3 வது ஆண்டாக பணி நீட்டிப்பு ஏன்? அமைச்சர் வேலுமணியின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகின்ற அனைத்து முறைகேடான ஒப்பந்தங்களுக்கும், உடன் நின்று துணை போவதால், 3 வது வருடமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதா? என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

“கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பிலிருக்கும் ரவி கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்தப் பதவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரண்டு முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஜூன் 30 அன்று ஓய்வு பெறவிருக்கும் உதவி ஆணையாளருக்கு மீண்டும் 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கோவை மாநகராட்சியில் தகுதியும், அனுபவமும், திறமையும், சீனியாரிட்டியும் கொண்ட அதிகாரிகள் பலர் இருந்தாலும், பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு 3 வருடங்கள் தொடர்ச்சியாக பணி நீட்டிப்பு செய்யப்படுவதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பேற்க தற்போது பதவியில் உள்ள அதிகாரிகள் ஒருவர் கூட இல்லையா? அல்லது நியமிக்க மனம் இல்லையா?

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, அரசு பதவியில் இருக்கும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர், அறிவிக்கப்படாத அ.தி.மு.க கட்சி நிர்வாகி போல செயல்பட்டுக் கொண்டு இருப்பதால், அமைச்சர் எஸ்.பி. வேலுமணியால் வழங்கப்பட்ட பரிசா?

தெற்கு மண்டல உதவி ஆணையாளர் என்ற முறையில், மண்டலத்திற்குட்பட்ட சாதாரண மக்களுக்கு அரசின் பலவிதமான சேவைகளும், நலத்திட்ட உதவிகளும் சரியான முறையில் சென்று சேர்கின்றனவா? அவர்களின் குடிநீர், சுகாதாரம், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா ? போன்றவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டளைகளை மட்டும் சிரமேற்கொண்டு, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில், அமைச்சர் வேலுமணியின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகின்ற அனைத்து முறைகேடான ஒப்பந்தங்களுக்கும், விசுவாசமாக உடன் நின்று துணை போனதால், 3 வது வருடமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதா?

“கோவை மாநகராட்சி உதவி ஆணையருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு : மர்மம் என்ன?” - கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் சொத்து வரி விதிப்பு, பெயர் மாற்றம், காலியிட வரி, கட்டிட அனுமதி பெறுதல், குடிநீர் இணைப்பு போன்ற வேலைகளில் முறைகேடுகள் , ஊழல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இத்தனை ஆண்டுகளாக இங்கு உதவி ஆணையாளராக பணியாற்றியும், இதைத் தடுத்து நிறுத்தி மக்களுக்கு உதவி செய்ய முடியாத ஒருவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்வது மக்களுக்கு பெருத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

தெற்கு மண்டல அலுவலகம் புதிதாக கட்டியது, தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தது, ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு செய்தது போன்றவற்றில் உதவி ஆணையாளர் ரவி அவர்களுக்கு பெரும் அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தெற்கு மண்டல பகுதியில் நடந்த பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு தகவல்கள் முறையாக வழங்கப்படவில்லை. வேறு எந்த மண்டலங்களிலும் இல்லாத வகையில் இதற்கு மண்டலத்திற்கு மட்டும் ஓய்வு பெற்ற ஒருவரை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பணி நீட்டிப்பு செய்ய தீவிரம் காட்டுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகச் சீர்கேடுகளையும் , மக்களைப் பற்றி நினைக்காத, மக்களின் நலனைப் புறக்கணித்த, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத ஆட்சி நடைபெறுவதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக உள்ள இது போன்ற நிகழ்வுகளையும், தமக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவர்களை நியமிப்பதையும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories