தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த ஸ்ரீராம் என்பவர் மீது சைபர் க்ரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் சார்பாக செய்தியாளர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
அவ்வாறு இருக்கையில், தமிழகத்தில் முதல் கொரோனா கேஸ் பிப்ரவரியில் வந்ததாகவும், மற்றொரு நாள் முதல் கேஸ் மார்ச் 9ம் தேதி வந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார் பீலா ராஜேஷ்.
கொரோனா நடவடிக்கை விவகாரத்தில் அ.தி.மு.க அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்காத நிலையில், சுகாதாரத்துறை செயலரின் இத்தகைய மாறுபட்ட பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவை ஸ்ரீராம் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை உடனடியாக நீக்கவில்லையெனில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என சென்னை சைபர் க்ரைம் போலிஸாரின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பதிவு நீக்கப்படாத நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குநரின் புகாரின் பேரில் வீடியோவை பகிர்ந்த ஸ்ரீராம் மீது சைபர் க்ரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீலா ராஜேஷ் பேசிய வீடியோவை பகிர்ந்ததற்காக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி பீலா ராஜேஷ் மக்களை அச்சுறுத்த நினைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.