விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்வதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து அறப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் சில இடங்களில் விவசாயிகள் மிரட்டியும், எச்சரித்தும் மின்கோபுரம் அமைத்துள்ளனர். அந்த மின்கோபுரம் அமைக்க தருவதான சொன்ன பணத்தை இந்த அரசாங்கம் முழுமையாக தராமல் இழுத்தடித்ததால் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவருக்குச் சொந்தமான நிலத்தில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உயரழுத்த மின்கோபுரம் அமைக்க பத்து லட்சம் தருவதாகக் கூறி இரண்டு லட்சம் மட்டும் வழங்கியுள்ளனர். மேலும், பல மாதங்கள் கடந்த பிறகும் மீதிப் பணத்தை அதிகாரிகளிடம் கேட்ட போது பணம் தராமல் இழுத்தடித்ததுடன், அவமரியாதையாக பேசியுள்ளதாக கூறுப்படுகிறது.
இதனால், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மனமுடைந்து விவசாயி ராமசாமி மின்கம்பத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அவருடைய தற்கொலைக்கு தமிழக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசி இறுதியான முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.