கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சற்று முன்னர் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்ததாவது : “தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த 5 கொரோனா பாதிக்கப்பட்டோர் மூலமாக 72 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது.
தமிழகத்தில் இன்று தூத்துக்குடியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது கட்டத்திலேயே உள்ளது. தொடர்பைக் கண்டறிய முடியாத நிலை வந்தால்தான் மூன்றாம் கட்டத்தை எட்டியதாகக் கருத முடியும்.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை சோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார். நாளை பிரதமருடன் ஆலோசித்த பிறகு தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும்.
கொரோனா பரிசோதனைக்காக ரேபிட் கிட் வருவதில் காலதாமதம் ஏற்பட்டாலும் தற்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை.
90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது”
இவ்வாறு தெரிவித்தார்.