அரியலூர் அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மார்ச் 20-ம்தேதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
நேற்று முன் தினம் மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த டிக்டாக் வீடியோ மற்றும் அவரது செல்போனை வாங்கி மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் பணிநீக்கம் செய்துள்ள அதிகாரிகள், அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.