உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், நாளை மாலை (மார்ச் 24) 6 மணி முதல் மார்ச் 31 வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.
144 தடை உத்தரவின்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.
பால், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும்.
அத்தியாவசியப் பணிகள், அவசர அலுவல் தொடர்பான அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும்.
பொதுப் போக்குவரத்து, தனியார் வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் இயங்காது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.